அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ஹக்கானி பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜலாலுதீன் ஹக்கானி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. #JalaluddinHaqqani
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பல்வேறு நாசவேலைகளில் ஹக்கானி பயங்கரவாத அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தலைவர் ஜலாலுதீன் ஹக்கானி.
முன்னர், அமெரிக்க உளவுத்துறையின் கைக்கூலியாக செயல்பட்ட ஜலாலுதீன், ஆப்கானிஸ்தானில் 1980-ம் ஆண்டுவாக்கில் மேலோங்கி இருந்த சோவியத் யூனியனுக்கு எதிரான ஆயுதப் போரட்டத்தை முன்னெடுத்து நடத்தியவர்.
பின்னாளில், பாகிஸ்தான் நாட்டு உளவுப்படையின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவது. பணம் கேட்டு மிரட்டுவதற்காக வெளிநாட்டவர்களை கடத்தி செல்வது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டுவரும் இந்த அமைப்பினர், பலரை கொன்று குவித்துள்ளனர். முன்னர், அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் உயிரிடன் இருந்தபோது அந்த அமைப்பினருடன் ஹக்கானி குழுவினர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர்.
ஹக்கானி பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாட்டு எல்லைப்பகுதிகளில் அமெரிக்க விமானப்படையும், ஆளில்லா விமானங்களும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ஹக்கானி பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜலாலுதீன் ஹக்கானி மரணம் அடைந்ததாக அந்த அமைப்பின் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Afghanistan #JalaluddinHaqqani #Haqqani