செய்திகள்

நிபந்தனைகள் ஏதுமின்றி ஈரான் அதிபருடன் பேசத் தயார் - டிரம்ப் திடீர் மனமாற்றம்

Published On 2018-07-31 10:45 GMT   |   Update On 2018-07-31 10:45 GMT
ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானியுடன் எவ்வித முன்நிபந்தனைகளும் இல்லாமல் அமைதி பேச்சுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #TrumpmeetRouhani #TrumpRouhani
வாஷிங்டன்:

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

சமீபத்தில் ஈரான் நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஹஸன் ரவுகானி, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் அந்நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானியுடன் எவ்வித முன்நிபந்தனைகளும் இல்லாமல் அமைதி பேச்சுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வந்துள்ள இத்தாலி பிரதமர் கியுசெப்பு கோன்ட்டே-வை வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர் அவருடன் டொனால்ட் டிரம்ப் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ஈரான் அதிபர் ரவுகானியை சந்திக்கும் எண்ணம் உள்ளதா? என்னும் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நான் சந்திப்புகளில் நம்பிக்கை கொண்டவன். ஈரான் அதிபர் என்னை சந்திக்க விரும்பினால் நான் நிச்சயமாக சந்திப்பேன்.

இதற்கு ஈரான் தயாரா? என்பது எனக்கு தெரியவில்லை. அணு ஒப்பந்தத்தில் இருந்து நான் விலகியதும் அவர்கள் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளனர். எனவே, அவர்கள் சந்திப்புக்கு முன்வருவார்கள் என நான் நம்புகிறேன். அவர்கள் எப்போது விரும்பினாலும் நான் சந்தித்துப் பேச தயாராகவே இருக்கிறேன்.

எனது பலத்தை வைத்தோ, பலவீனத்தாலோ நான் இந்த முடிவுக்கு வரவில்லை. பேச்சுவார்த்தைதான் சரியானது என்பதால் நாம் இணைந்து பணியாற்றினால் நல்லது என்பதால் நாட்டின் நலன் கருதி எவ்வித முன்நிபந்தனைகளும் இன்றி அவர்கள் விரும்பும் நேரத்தில் ஈரானுடன் பேச நான் தயாராக இருக்கிறேன்.

முறைகேடான நடவடிக்கைகளை கைவிடுமாறு ஈரானுக்கு அழுத்தம் தந்துவரும் அனைத்து நாடுகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த முயற்சியில் அமெரிக்காவுடன் துணையாக இருக்கும் இத்தாலியை நாங்கள் வரவேற்கிறோம். #TrumpmeetRouhani  #TrumpRouhani
Tags:    

Similar News