பாரதிய ஜனதா கட்சி இந்துக்களை தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறது என்று சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. #ShivSena #BJP
மும்பை:
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில், பாரதிய ஜனதாவை கடுமையாக தாக்கி கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்வது போல, பாரதிய ஜனதா கட்சி இந்துக்களை தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்கிறது.
காங்கிரசாவது முஸ்லிம்களுக்கு சாதகமாக செயல்பட்டு அவர்களை தங்கள் பக்கம் வைத்துள்ளது. ஆனால் பாரதிய ஜனதா இதை செய்வது இல்லை. தேர்தல் காலத்தில் மட்டும் இந்துத்வா கொள்கைகளை தாக்கி பிடிப்பது போல காட்டிக்கொள்வார்கள். மிக ஆவேசமாக நடந்து கொள்வார்கள்.
தேர்தல் முடிந்து ஆட்சி கிடைத்துவிட்டால் அதன்பிறகு இந்துத்வா கொள்கைகளை மறந்து விடுவார்கள். இந்துத்வா என்ற ஏணி அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு உதவுகிறது. அதன்பிறகு அந்த ஏணி அவர்களுக்கு தேவையில்லை. எனவே தூக்கி எறிந்துவிடுகின்றனர்.
தேர்தலுக்கு முன்பு இந்துத்வா தொடர்பான எத்தனையோ விதமான வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. ராமர் கோவில் கட்டுவோம் என்றார்கள். ஒரே சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்றார்கள். இதில் ஏதாவது ஒன்றையாவது நிறைவேற்றினார்களா?
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சிக்காக் கோவில் நடந்த உலக இந்து மாநாட்டில் பேசும்போது, இந்துக்களுக்கு ஆதிக்க எண்ணமும், ஆவேசமும் மனதில் வரவில்லை. இன்றைய சூழலில் அனைவரும் ஒன்று திரண்டு ஆவேசத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
கடந்த தேர்தலில் இப்படித்தான் இந்துக்களுக்கு ஆவேசம் வந்தது. இதன் காரணமாகத்தான் அனைவரும் ஒன்று திரண்டார்கள். இதன் மூலம் மோடி பிரதமர் ஆனார். ஆனால் நடந்தது என்ன?
இந்துத்வாவுக்காக எப்போதும் குரல் கொடுத்து கொண்டிருக்கும் சிவசேனாவை முதுகில் குத்தினார்கள். இந்துத்வா கொள்கைகளையும், நாட்டு நலனையும் தீவிரமாக வற்புறுத்தி பேசுபவர்கள் பாரதிய ஜனதாவுக்கு எதிரியாக உள்ளனர்.
சொந்த நாட்டிலேயே இந்துக்களை பயங்கரவாதிகள் என சித்தரிக்கும் நிலைமை இப்போது ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு அதில் எழுதப்பட்டிருக்கிறது. #ShivSena #BJP