டெல்லி போலீசாரை கேலிசெய்யும் வகையில் அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் இருந்து முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விடுவிக்கப்பட்டார். #Kejriwal #thullaremark
போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் இருந்து டெல்லி முதல்- மந்திரி கெஜ்ரிவால் விடுவிப்பு
பதிவு: செப்டம்பர் 10, 2018 20:57
புதுடெல்லி:
டெல்லி லஜ்பத் நகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அஜய்குமார் தனேஜா என்ற போலீஸ்காரர் தனது வக்கீல் எல்.என். ராவ் மூலமாக கடந்த 2016-ம் ஆண்டில் டெல்லி பெருகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
‘முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் குறித்து பேட்டியளித்தபோது போலீசாரை கேலிசெய்யும் விதமாக ‘துல்லா’ (மந்தமான தொப்பைக்காரர்கள்) என்ற வார்த்தையை கூறினார். முதல்-மந்திரி பதவி வகிக்கும் கெஜ்ரிவால் போன்ற ஒருவர் இதுமாதிரியான வார்த்தையை கூறி இருப்பது கவலைக்குரியது. எனவே அவர் மீது கோர்ட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தனது மனுவில் அவர் கூறி குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு கடந்த 7-5-2016 அன்று மாஜிஸ்திரேட்டு ரவீந்திரகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இருப்பதாக கோர்ட்டு கருதுகிறது. எனவே, அவர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றுகூறி அவருக்கு சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார்.
இந்த மனுவின் மீது கடந்த இரண்டாண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில், இவ்வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பெருநகர கூடுதல் மாஜிஸ்திரேட் சமர் விஷால் இன்று அளித்துள்ள தீர்ப்பில், ‘அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் இவ்வழக்கின் மனுதாரரான அஜய் குமார் தனேஜாவை குறிப்பிட்டு ‘துல்லா’ என்னும் வார்த்தையை அவர் குறிப்பிடவில்லை. எனவே, தன்னைப்பற்றி அவதூறாக பேசியதாக யாருமே பொருள்கொள்ள முடியாது.
மனுதாரரின் புகாரில் சட்டரீதியாக அவரது மனம் காயப்பட்டதாக எந்த சிறப்பான காரணமும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இவ்விவகாரத்தை அவதூறு வழக்காக விசாரிக்க கோரிய இந்த மனுவை தள்ளுபடி செய்வதுடன், இவ்வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது’ என குறிப்பிட்டுள்ளார். #Kejriwal #thullaremark