நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் பெரியாறு அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது. #MullaPeriyar
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில நாட்களாக மழை குறைந்ததால் அணையின் நீர் மட்டமும் வேகமாக குறைந்தது.
இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவையும் குறைத்தனர். தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனால் நேற்று வரை 1240 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 4 ஆயிரத்து 78 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 2 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று அணையின் நீர் மட்டம் 132.80 அடியாக இருந்து. இன்று அது 133.60 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் வைகை அணையின் நீர் மட்டம் 58.83 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 1596 கன அடி நீர் வருகிறது. மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 960 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 41.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 118.40 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெரியாறு 115.20, தேக்கடி 56.4, கூடலூர் 24.5, சண்முகாநதி அணை 12, உத்தமபாளையம் 31.6, வீரபாண்டி 26, வைகை அணை 3, சோத்துப்பாறை 1, கொடைக்கானல் 1. #MullaPeriyar