இந்தியாவில் ஐபோன் பயன்படுத்துவோரை அச்சுறுத்தும் புதிய விதிமுறையை டிராய் விதித்து இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Apple
ஐபோன் வைத்திருப்போரை பாதிக்கும் டிராய் புது விதிமுறை
பதிவு: ஜூலை 21, 2018 16:05
ஆப்பிள் மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறையிடையே நிலவி வரும் போட்டி மேலும் சூடுபிடித்து இருக்கிறது. ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவகாரத்தில் ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் மற்றும் இந்தியாவில் டெலிகாம் சேவையை ஒழுங்குபடுத்தும் டிராய் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.
இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் ஒருபடி கீழ் இறங்கி, டிராய் உருவாக்கியிருக்கும் செயலியை தனது ஐபோன் மாடல்களில் அனுமதிக்காத பட்சத்தில் ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான அங்கீகாரத்தை ஐபோன்களுக்கு ரத்து செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.என்.டி. (DND) என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி இருக்கிறது. தற்சமயம் இந்த செயலி டி.என்.டி. 2.0 என அழைக்கப்படுகிறது. இந்த செயலியை ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் அனுமதிக்க ஆப்பிள் மறுத்து விட்டது. பயனரின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை கோருவதால் டிராய் உருவாக்கியிருக்கும் செயலி பயனருக்கு தனியுரிமை பிரச்சனையை ஏற்படுத்தலாம் என ஆப்பிள் கருதுகிறது.
>
எனினும் ஆப்பிள் தனது பயனரின் தனியுரிமை எவ்வித காரணங்களாலும் பறிக்கப்பட கூடாது என்பதில் மிக தீவிரமாக இருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐபோனில் பயனரின் தனியுரிமை தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் எவ்வித செயலியாக இருந்தாலும், அது அரசாங்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இருந்தாலும், பயனரின் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவரங்களை சேகரிக்கும் பட்சத்தில் அனுமதி வழங்க ஆப்பிள் தயாராக இல்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை குறைக்க பல்வேறு ஸ்மார்ட் வழிமுறைகள் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இதனால் புதிய ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளம் ஐபோனில் ஸ்பேம் அழைப்புகள் குறைக்கப்படுவதை விளக்கி, டிராய் செயலியை அனுமதிப்பதில் இருந்து விலக்கு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #telecommunications #Apple