செய்திகள்

பரோல் வழக்கில் நளினி நேரில் ஆஜராவதில் அரசுக்கு என்ன சிக்கல்?- ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

Published On 2019-06-11 10:30 GMT   |   Update On 2019-06-11 10:30 GMT
பரோல் கேட்டு நளினி தொடர்ந்த வழக்கில் அவரை விசாரணைக்கு ஆஜர்படுத்துவதில் என்ன பாதுகாப்பு சிக்கல் உள்ளது? என மாநில அரசுக்கு ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் நளினி.

இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என் மகள் ஹரிதா லண்டனில் பாட்டியுடன் வசித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். தற்போது ஹரிதாவுக்கு 26 வயது நடக்கிறது. எனவே மாப்பிள்ளை பார்த்து அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இதற்காக எனக்கு பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

எனக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை கடந்த 2000-ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன்பின்னர், (2000-ம் ஆண்டு முதல்) 3,700 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இவர்கள் 10 ஆண்டுகளுக்கு குறைவாகவே தண்டனை அனுபவித்தவர்கள். ஆனால், 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என்னை விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது.

ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் உள்ளது. ஆனால், 27 ஆண்டுகளாக எனக்கு பரோல் வழங்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வழங்கிய பரோல் விண்ணப்பத்தை வேலூர் சிறை நிர்வாகம் பரிசீலிக்கவில்லை.

எனவே மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் வேண்டும். இது தொடர்பான வழக்கில் நானே ஆஜராகி வாதிட அனுமதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, ‘நளினி தன்னுடைய மகள் திருமண ஏற்பாடு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகி வாதிட அனுமதிக்க கூடாது. அவரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் பாதுகாப்பு சிக்கல் உள்ளது’ என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், ‘வழக்கில் ஆஜராகி வாதிட நளினிக்கு வாய்ப்பு அளிக்க முடியாது என்று கூறமுடியாது. அவ்வாறு நேரில் ஆஜராகி வாதிட அவருக்கு சட்டப்படி முழு உரிமை உள்ளது.

அவரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் என்ன பாதுகாப்பு சிக்கல் உள்ளது? எனவே, இது குறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News