செய்திகள்

மக்கள் பிரச்சினைக்காக எதையும் செய்ய தயங்க மாட்டேன்- நாராயணசாமி ஆவேசம்

Published On 2019-06-07 10:49 GMT   |   Update On 2019-06-07 10:49 GMT
மக்கள் பிரச்சினைக்காக எதையும் செய்ய தயங்க மாட்டேன் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.

புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதுபோல் புதுவையிலும் அனுமதி வழங்கப்படுமா?

பதில்:- இதுதொடர்பாக புதுவையில் உள்ள வணிக நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும். சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொள்ள வேண்டும். எந்தெந்த கடைகளை திறந்து வைக்கலாம் என்பதுகுறித்தும் முடிவு செய்ய வேண்டும். உடனடியாக எதையும் செய்துவிட முடியாது.

கே:- உள்துறையை வைத்துள்ள முதல்- அமைச்சர் எனக்கு எதிராக வன்முறையை தூண்டுகிறார் என கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளாரே?

ப:- போராட்டம் நடத்த முதல்-அமைச்சருக்கு உரிமை இல்லையா? மக்கள் பிரச்சினைக்காக எதையும் செய்ய நாங்கள் தயங்க மாட்டோம்.

கே:- கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதா?

ப:- 3 ஆண்டுகளாக புதுவையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. ரோடியர், சுதேசி, பாரதி மற்றும் கூட்டுறவு ஆலைகளை புனரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வருமானம் தரக்கூடிய திட்டங்களை அரசால் நிறைவேற்ற முடியவில்லை. எந்த கோப்பு அனுப்பினாலும் காலதாமதம் செய்யப்படுகிறது. கோப்புகளை திருப்பி அனுப்புகின்றனர். அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.

அகில இந்திய அளவில் நாட்டின் வளர்ச்சி 5.7 சத வீதம். ஆனால், புதுவையில் மாநில வளர்ச்சி 11 சதவீதமாக உள்ளது. மக்கள் நலத்திட்டங்களையும், வளர்ச்சித்திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் போனால் மாநில வளர்ச்சி குறைந்துவிடும்.

காவலர் மற்றும் ஆசிரியர் பணியிடத்தை ஓராண்டுக்கு முன்பே நிரப்பி இருக்கலாம். தேவையற்ற காலதாமதம் இதில் ஏற்பட்டது. எந்த ஒரு பிரச்சினைக்கும் மக்கள் கவர்னரை கேட்க மாட்டார்கள். எங்களைத்தான் கேட்பார்கள்.

நாங்கள்தான் பதில் கூறும் நிலையில் உள்ளோம். விவசாய கடனை தள்ளுபடி செய்து கவர்னரிடம் கோப்பு அளித்தோம். இந்த கோப்பை திருப்பி அனுப்பி விட்டார். டெல்லியில் உள்துறை வரை எடுத்து சென்று அனுமதி வாங்கினேன்.

இதேபோல் ஒவ்வொரு கோப்பையும் டெல்லிக்கு சென்று அனுமதி பெற வேண்டுமா? பியூன் நியமிக்ககூட டெல்லி சென்று அனுமதி பெறுவது அவசியமா? கவர்னர் மீது எங்களுக்கு தனிப்பட்ட குரோதமோ, வெறுப்போ இல்லை.

கே:- பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு புதுவையில் அமல்படுத்தப்படுமா?

ப:- அமைச்சவை கூட்டத்தில்தான் இதுதொடர்பாக முடிவெடுக்க வேண்டும்.

கே:- பிரதமர் மோடியை சந்திக்கும்போது கவர்னரை மாற்ற வேண்டும் என வலியுறுத்துவீர்களா?

ப:- கவர்னரை மாற்ற வேண்டும் என்ற கருத்தில் மாற்று கருத்து இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News