செய்திகள்

மன்னார்குடி அருகே குடிநீர் கேட்டு குழாய்க்கு மாலை அணிவித்து கிராம மக்கள் நூதன போராட்டம்

Published On 2019-06-01 17:00 GMT   |   Update On 2019-06-01 17:00 GMT
மன்னார்குடி அருகே குடிநீர் கேட்டு குழாய்க்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து கிராம மக்கள் தங்களின் அவல நிலையை வெளிப்படுத்தினர்.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள செருமங்களம் கிராமத்தில் உள்ள தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உரிய குடிநீர் வசதி செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். குடிநீர் கேட்டு அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது குடிநீர் கேட்டு அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் கிராம மக்கள் தங்களின் அவல நிலையை வெளிப்படுத்தினர். 

செருமகலம் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை விரைவில் சரி செய்து தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். கடந்த ஏப்ரல் மாதம் இதே தெருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தேர்தலையொட்டி குடிநீர் தேவை தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது கடந்த பல நாட்களாக மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

Similar News