செய்திகள்

பதவி மீது எனக்கு ஆசையில்லை- வைகோ பேச்சு

Published On 2019-06-01 07:31 GMT   |   Update On 2019-06-01 07:31 GMT
பதவிகள் மீது எனக்கு என்றுமே ஆசை கிடையாது என ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் வைகோ பேசினார்.
சென்னை:

ம.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் நடந்தது. சிறுபான்மை பிரிவு செயலாளர் ராத்புகாரி தலைமை வகித்தார். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,

இந்திய கம்யூனிஸ்டு மு.வீரபாண்டியன், காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் அசன் ஆரூன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தென்றல் நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாட்டில் மத நல்லிணக்கம் தழைக்க வேண்டும். ம.தி.மு.க. சார்பில் 25 ஆண்டுகளாக இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ இயற்கை அன்னையை வேண்டிக்கொள்கிறேன்.

பதவிகள் மீது எனக்கு என்றுமே ஆசை கிடையாது. கட்சியினரை பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பேனே தவிர நான் அந்த பதவிக்கு ஆசைப்படுவது இல்லை.

எனது கட்சியினர் எம்.பி., எம்.எல்.ஏ., கவுன்சிலர் உள்ளிட்ட எந்த பதவிகளையும் எதிர்பார்ப்பவர்கள் அல்ல.

என்னோடு இருந்தால் துன்பம், துயரம் தொல்லை தான் வரும். ஆனாலும் என்னோடு 25 ஆண்டுகளாக பல லட்சக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களுக்காக நான் எதுவும் இதுவரை செய்தது இல்லை.

ஆனாலும், என் மீதான நம்பிக்கை, எதிர்பார்ப்பில் உணர்வு பூர்வமாக கட்டுப்பாடாக இணைந்து செயல்படுகிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பாராட்டுக்கள்.

இவ்வாறு வைகோ பேசினார்.
Tags:    

Similar News