செய்திகள்
கோவில்பட்டியில் அரசு பொருட்காட்சியை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்ட போது எடுத்தபடம்.

நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக பெற்றுத்தருவோம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2019-05-29 05:40 GMT   |   Update On 2019-05-29 05:40 GMT
பாரதிய ஜனதா கூட்டணியில் இருப்பதால் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக பெற்றுத்தருவோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தக வளாகத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறையவில்லை. இந்தியா முழுவதும் மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் இங்கு தமிழகத்துக்கு எதிராக பாரதிய ஜனதா இருப்பது போல சித்தரிப்பு, தொடர்ந்து பல்வேறு வகையில் எதிர்க்கட்சியினர் தவறான பிரசாரம் செய்த காரணத்தால் தமிழக மக்கள் ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். தேசிய நீரோட்டத்தோடு சேர்ந்து நாமும் வாக்களித்து இருக்கலாம் என்று இன்று மக்கள் வருத்தப்படுகின்றனர்.

அதேபோல மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர்.

தி.மு.க.வை பொறுத்தவரை இந்த தேர்தல் முடிவுகள் பெருத்த ஏமாற்றம்தான். மே 23-ந் தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும் என ஸ்டாலின் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார். ஆனால் மாற்றம் வரவில்லை. ஸ்டாலினுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.

தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தாலும், நாங்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருப்பதால் தமிழர்களின் நலன் கருதி தமிழர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறாமல் தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அதனை கண்டிப்பாக பெற்றுத் தருவோம்.

இந்த பணியை நாங்கள் தான் செய்ய முடியும். தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தாலும் அவர்களால் இதனை செய்ய முடியாது. எப்படி அவர்கள் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்கிறார்களோ? அதே போல் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்யலாம். அதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் சாதிக்க முடியாது. தி.மு.க. பெற்றுள்ளது பயனில்லாத வெற்றி.

தூத்துக்குடியை பொருத்தவரை கனிமொழி வெற்றி பெற்றிருந்தாலும் கூட, கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிலுக்கும், கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்கும் அவர்களால் குரல் கொடுக்க முடியாது. வெற்றி -தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தமிழகத்துக்கு தேவையான திட்டங்களைப் பெற்று தரும் வகையில் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே சாதிப்பது நாங்கள்தான். தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவோம், தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் எங்களது ஸ்லீப்பர் செல்கள் மறுபடியும் வருவார்கள் என தினகரன் கூறியது நல்ல ஜோக்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News