செய்திகள்

38 பாராளுமன்ற தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகள்

Published On 2019-05-25 10:11 GMT   |   Update On 2019-05-25 10:11 GMT
தமிழகத்தில் நடந்து முடிந்த 38 பாராளுமன்ற தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீதம் குறித்து பார்ப்போம்.
சென்னை:

தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் பாராளுமன்றத்தில் பா.ஜனதா, காங்கிரசை தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 1 கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 ஓட்டுகள் கிடைத்தன. இது 44.34 சதவீதம் ஆகும்.

கடந்த தேர்தலில் தி.மு.க. 34 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்தது. தி.மு.க.வுக்கு அப்போது 95 லட்சத்து 75 ஆயிரத்து 850 ஓட்டுகள் கிடைத்தன. இது 23.61 சதவீதம் ஆகும்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து அ.தி.மு.க. போட்டியிட்டது. அ.தி.மு.க. 20 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன.



தி.மு.க. இந்த தேர்தலில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அ.திமு.க. 78 லட்சத்து 30 ஆயிரத்து 520 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது 18.5 சதவீதம் ஆகும். கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட இந்த தேர்தலில் அ.தி.மு.க. 1 கோடியே 1 லட்சத்து 52 ஆயிரத்து 648 வாக்குகளை இழந்துள்ளது.

அதே நேரத்தில் தி.மு.க. தனது வாக்கு வங்கியை 23.61 சதவீதத்தில் இருந்து 32.78 சதவீதமாக உயர்த்தியுள்ளது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
Tags:    

Similar News