செய்திகள்

கோவை இருகூரில் பஞ்சு குடோனில் தீ விபத்து

Published On 2019-05-25 09:41 GMT   |   Update On 2019-05-25 10:01 GMT
கோவை இருகூரில் பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிங்காநல்லூர்:

கோவை இருகூர் கண்ணப்பன் நகரில் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது.

இந்த குடோனை பீளமேட்டை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வாடகைக்கு எடுத்துகழிவு பஞ்சு தரம் பிரிக்கும் தொழில் செய்து வருகிறார். இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். கோடை விடுமுறை என்பதால் 10-க்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு சென்றனர்.

இன்று காலை 8 மணியளவில் பஞ்சு குடோனில் இருந்து கரும் புகை கிளம்பியது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அலறி சத்தம்போட்டனர். சத்தம்கேட்டு அங்கிருந்த 30 தொழிலாளர்கள் வெளியே ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் மேற்பார்வையில் சூலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமாரசாமி தலைமையிலான 20 தீயணைப்பு வீரர்கள் பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் சென்றனர்.

அங்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இது தவிர தனியார் நிறுவனங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருந்தாலும் பஞ்சு குடோன் முற்றிலும் எரிந்து சாம்பலானது. சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ முற்றிலும் அணைக்க வீரர்கள் போராடினர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக தீ பிடித்ததால் 30 தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.கம்பெனி மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தீ பற்றியதால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News