செய்திகள்

23 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் வென்ற திமுக

Published On 2019-05-24 06:36 GMT   |   Update On 2019-05-24 06:36 GMT
8 முறை வென்ற அ.தி.மு.க.வை வீழ்த்தி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க. அபார வெற்றி பெற்றது. மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடைசி வரை பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் பதிவான 2 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகளில் டாக்டர் சரவணன் 85 ஆயிரத்து 434 வாக்குகள் பெற்றார்.

எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி 83 ஆயிரத்து 38 ஓட்டுகளும், அ.ம.மு.க. வேட்பாளர் மகேந்திரன் 31 ஆயிரத்து 199 வாக்குகளும் பெற்றனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேல் 12 ஆயிரத்து 610 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதி 5 ஆயிரத்து 467 ஓட்டுகளும் பெற்றனர்.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் 2 ஆயிரத்து 396 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி வாகை சூடினார்.

ஓட்டு எண்ணிக்கையின்போது இந்த தொகுதியில் 22 சுற்றுகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்து 8 சுற்றுகள் வரை ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் அ.தி.மு.க.வை விட கூடுதல் வாக்குகளை பெற்று வந்தார்.

9 முதல் 11 சுற்றுகள் எண்ணிக்கையின்போது அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி கூடுதல் வாக்குகளை பெற்றார். அதுபோல 12 முதல் 16 சுற்றுகள் வரை ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூடுதல் வாக்குகளை பெற்ற வண்ணம் இருந்தனர். மாறி மாறி முன்னிலை வகித்ததால் அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே அவ்வப்போது சலசலப்பும், பரபரப்பும் நிலவியது.

அடுத்ததாக 17 முதல் 19 சுற்றுகளில் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை பெற்றார். 20-வது சுற்றில் மீண்டும் அ.தி.மு.க. பக்கம் முன்னிலை கிடைத்தது. ஆனால் 21, 22 ஆகிய சுற்றுகளில் தி.மு.க. கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது.

திருப்பரங்குன்றம் தொகுதியை பொருத்தவரை அ.ம.மு.க. 31 ஆயிரத்து 119 வாக்குகளை பெற்றுள்ளது. இது அ.தி.மு.க.வின் வெற்றியை தடுத்து விட்டதாக அ.தி.மு.க.வினரே கூறுகின்றனர். ஆனாலும் தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தலில் கிடைத்த திருப்பரங்குன்றம் வெற்றிக்கனி பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தொகுதியில் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்று அ.தி.மு.க. தனது கோட்டையாகவே வைத்திருந்தது. ஆனால் இந்த இடைத்தேர்தல் வெற்றி அ.தி.மு.க.வுக்கு கிட்டவில்லை.

கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மீண்டும் 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இது தி.மு.க.வினர் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், வாக்குகள் வித்தியாசம் மிக குறைவாக இருப்பதால் அ.தி.மு.க.வினரும் வெற்றியை தவற விட்டதில் சோகமாகவே உள்ளனர்.
Tags:    

Similar News