செய்திகள்

6 மாதங்களுக்கு பிறகு, கர்நாடக எல்லை பகுதிக்கு சென்றடைந்தது பெருமாள் சிலை

Published On 2019-05-22 10:58 GMT   |   Update On 2019-05-22 10:58 GMT
வந்தவாசியில் இருந்து புறப்பட்ட பெருமாள் சிலை கடந்த 6 மாதங்களுக்கு பிறகு இன்று கர்நாடக எல்லை பகுதிக்கு சென்றடைந்தது.
ஓசூர்:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கெரகோட்டையில் செதுக்கப்பட்ட 350 டன் எடையுள்ள பிரமாண்ட கோதண்டராமர் சிலை ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் ஈஜிபுராவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த பெருமாள் சிலை திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை, மத்தூர், போச்சம்பள்ளி ஆகிய ஊர்கள் வழியாக கிருஷ்ணகிரியை அடைந்தது.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேரண்டப்பள்ளிக்கு வந்தது. அந்த பகுதியில் ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடும் தென்பெண்ணையாற்றை பெருமாள் சிலை கடந்து செல்லமுடியாததால் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

பெருமாள் சிலை ஆற்றை கடந்து செல்வதற்காக அந்த பகுதியில் தற்காலிகமாக மண்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் மண்சாலை அமைக்கும் பணி தடைப்பட்டது.

கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து குறைந்ததும், மீண்டும் மண்சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்று மண் சாலை அமைத்து ஆற்றில் இருந்து நீர்வரத்து குழாய் மூலம் செல்ல ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் 4 ராட்சத குழாய்கள் பொருத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் மண்சாலை அமைக்கப்பட்டது. இரவு பேரண்டப்பள்ளியில் இருந்து பெருமாள் சிலை புறப்பட்டு மண்சாலையை கடந்து சென்றது.

கடந்த 13 நாட்களுக்கு பிறகு மண்சாலை அமைக்கப்பட்டு பேரண்டபள்ளியில் இருந்து புறப்பட்ட பெருமாள் சிலை இன்று காலை ஓசூர் நகர பகுதி வழியாக வந்து ஓசூர் பஸ் நிலையம் அருகே வந்தது.

இதைத்தொடர்ந்து ஓசூரை அடுத்த அத்திப்பள்ளி வழியாக தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியில் 350 டன் எடை கொண்ட பெருமாள் சிலை இன்று காலை 9 மணியளவில் சென்றடைந்தது.

லாரியின் மூலம் 350 டன் எடை கொண்ட பெருமாள் சிலை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது. கடந்த 6 மாத காலமாக அந்த பெருமாள் சிலை பெங்களூருவுக்கு செல்வதற்குள் லாரியின் டயர்கள் பலமுறை பஞ்சராகியும், வண்டியின் உதிரிபாகங்கள் பழுதாகியும் தடைகள் ஏற்பட்டது.

இதேபோன்று வழிநெடுக செல்வதற்கான உரிய பாதைகள் இல்லாததால் சில இடங்களில் வழித்தடத்தில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் அகற்றப்பட்டும், சில இடங்களில் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டும் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு சிலை ஓசூர் அருகே பேரண்ட பள்ளி வந்ததது. அங்கு தென்பெண்ணையாற்றை கடக்க முடியாமல் மண் சாலை அமைப்பதற்கு கடந்த 13 நாட்களாக சிலை அங்கேயே நிறுத்தி வைத்து வழிதடங்கள் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு பிறகு இன்று காலை தமிழக-கர்நாடக எல்லைக்குள் சென்று அடைந்தது. அப்போது வழிநெடுக பெருமாள் சிலையை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News