செய்திகள்

கோவில் திருவிழாவில் மோதல்: டிராக்டர் ஏற்றி வாலிபர் கொலை? - டிரைவர் கைது

Published On 2019-05-22 04:47 GMT   |   Update On 2019-05-22 04:47 GMT
டிராக்டர் ஏற்றி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோளிங்கர்:

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த அக்கச்சிகுப்பம் காலனியை சேர்ந்தவர் வினோத்குமார் (26). இவரும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட நண்பர்களும் நேற்று முன்தினம் இரவு பெரியக்குடி கொண்டா திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அங்கு நாடகம் பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது சின்னக்குடி கொண்டா கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவருடைய நண்பர்களுக்கும், வினோத்குமார் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைக்கண்ட பொதுமக்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பாஸ்கரின் தம்பி பிரதாப் (21) திரவுபதி அம்மன் கோவிலுக்கு டிராக்டரில் தண்ணீர் ஏற்றி அச்கச்சிக்குப்பம் வழியாக ஓட்டிச்சென்றார்.

இதனைக்கண்ட வினோத்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் டிராக்டரை மடக்கி நிறுத்த முயன்றனர். அதிர்ச்சி அடைந்த பிரதாப் வேகமாக டிராக்டரை ஓட்டினார்.

வினோத்குமார் ஓடிச்சென்று டிராக்டரின் பின்பகுதியில் ஏறி டிரைவர் இருக்கையை நோக்கி சென்றார். அப்போது அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். டிராக்டரின் பின்பக்க டயர் அவர் மீது ஏறி இறங்கியது.

இதில் படுகாயமடைந்த வினோத்குமார் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், சோளிங்கர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து வினோத்குமாரின் தந்தை விக்டர்ராஜா சோளிங்கர் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனர்.

வினோத்குமார் தவறிவிழுந்து இறந்தாரா அல்லது டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News