செய்திகள்

நாகர்கோவில் ரெயில்நிலையத்தில் 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

Published On 2019-05-18 12:37 GMT   |   Update On 2019-05-18 12:37 GMT
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கேரளாவுக்கு கடத்த வைத்திருந்த 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது.

பறக்கும்படை தாசில்தார் அப்துல்லாமன்னான் தலைமையிலான அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக அப்துல்லா மன்னானுக்கு தகவல் கிடைத்தது.

அவர் தலைமையில் தனித்துறை வட்டாட்சியர் முருகன், வருவாய் ஆய்வாளர் ரதன்ராஜிகுமார் மற்றும் டேவிட் ஆகியோர் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சாக்குமூடைகளில் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 1 டன் ரே‌ஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது கேரளாவுக்கு ரெயிலில் கடத்திச்செல்ல ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. ரே‌ஷன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரே‌ஷன் அரிசியை கோணம் அரசு கிடங்கில் ஒப்படைத்தனர்.

இரணியல் ரெயில்நிலையத்தில் நேற்று 1¼ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News