செய்திகள்

கமல் வரலாறு தெரியாமல் பேசுகிறார்- இல.கணேசன்

Published On 2019-05-18 09:23 GMT   |   Update On 2019-05-18 09:23 GMT
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரலாறு தெரியாமல் பேசுவதாக பாரதிய ஜனதா தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

முதல் தீவிரவாதி ஒரு ‘இந்து’ என்று சர்ச்சையை கிளப்பிய கமல் இந்து என்பது இந்துக்கள் பெயர் அல்ல என்று மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர்கூறி இருப்பதாவது:-

ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, ‘இந்து’ என்ற வார்த்தையை சொல்லவில்லை.

முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவர்களால் ‘இந்து’ என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘பெயராக’, ‘மதமாக’ கொள்வது எத்தகைய அறியாமை என்று குறிப்பிட்டுள்ளார். கமலின் சர்ச்சைக்குரிய இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இது தொடர்பாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளதாவது:-

கமல் எதற்காக இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

விஷ்ணுபுராணத்தில் ஒரு ஸ்லோகம் ‘இமயம் தொடங்கி இந்து மகா சமுத்திரம் வரை பரந்து விரிந்த இந்த நிலப்பரப்பு இந்துஸ்தானம்’ என்று விவரிக்கிறது. இந்துஸ்தான் என்பது மட்டுமல்ல. இந்த நாட்டின் எல்லையையும் குறிப்பிடுகிறது. இது ஆண்டவனால் உருவாக்கப்பட்ட தேசம்.

நம்நாட்டில் இருக்கும் மதங்களை சனாதன தர்மம் என்போம். நம் நாட்டில் தோன்றிய எல்லா மதங்களுக்கு இடையேயும் ஒரு ஒற்றுமை உண்டு.

ஆனால், பின்நாளில் அந்நிய மண்ணில் தோன்றி இங்கு வந்த முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் அடிப்படை கூறுகள் வேறுபட்டவை.

அந்த இரு மதங்களும் வந்ததால் நம் நாட்டில் தோன்றிய மதங்களை இந்துஸ்தான மதங்கள் என்று வகைப்படுத்தினார்கள். பின்னர் இந்து மதங்கள், இந்து மதம் என்று நமது சவுகரியத்துக்காக நாம் வைத்துக்கொண்ட பெயர்தான் இது. மாற்றான் தரவில்லை. அவன் வருவதற்கு முன்பே நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட பெயர்தான் இந்து.

சங்கராச்சாரியார் தனது உதவியாளரிடம் பைலை கொடுத்து இதை வெங்கட்ராமனிடம் கொண்டுபோய் கொடு என்பது வழக்கம். திடீரென்று ஒரு நாள் இந்த பைலை ‘குடுமி’ வெங்கட்ராமனிடம் கொண்டுபோய் கொடு என்றாராம்.

அதை கேட்டதும் உதவியாளருக்கு ஆச்சரியம். என்ன இப்படி குடுமி வெங்கட்ராமன் என்று சொல்கிறாரே என்று குழம்பிபோனார். அப்புறம்தான் அவருக்கு புரிந்தது அங்கு புதிதாக இன்னொரு வெங்கட்ராமன் வேலையில் சேர்ந்து இருந்தார்.

எனவேதான் ஏற்கனவே இருந்த வெங்கட்ராமன் குடுமி வைத்திருந்ததை அடையாளப்படுத்துவதற்காக அப்படி கூறி இருக்கிறார். பல மதங்களின் வருகையால் இங்குள்ள மதங்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த நாட்டின் மதம் இந்து மதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.

இந்து என்று சொல்வதற்கு இங்குள்ளவர்கள் வெட்கப்படலாம். ஆனால், பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இன்றும் ‘மோடி பிரைம் மினிஸ்டர் அப் இந்துஸ்தான்’ என்றுதான் சொல்கிறார்கள்.

இங்கிருந்து ஹஜ் புனித பயணம் செய்பவர்களையும் அங்குள்ளவர்கள் இந்து என்றே சொல்கிறார்கள். நம் தேசத்தவர் அனைவரும் இந்துக்களே.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News