செய்திகள்

பெருமாள் சிலை பெங்களூருக்கு கொண்டு செல்வதில் சிக்கல் நீடிப்பு

Published On 2019-05-18 08:24 GMT   |   Update On 2019-05-18 08:24 GMT
கடந்த 6 மாதமாகியும் தமிழக எல்லையை தாண்டாத பெருமாள் சிலை வழியில் உள்ள சிக்கல்களை கடந்து எப்போது பெங்களூருக்கு கொண்டு செல்லப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஓசூர்:

கர்நாடக மாநில பெங்களூரில் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று 108 அடி உயரத்தில் பெருமாள் சிலை ஒன்று அமைக்க முடிவு செய்தது.

இந்த பெருமாள் சிலையானது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு மலையில் இருந்து ஒரே கல்லை எடுத்து வடிவமைக்கப்பட்டது. இந்த பெருமாள் சிலையின் பணிகள் முடிவடைந்து கடந்த டிசம்பர் மாதம் பெங்களூருக்கு லாரி ஒன்றின் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் சிலையின் எடை அதிகம் என்பதால் இந்த சிலை பாலங்களை கடக்க தேசிய நெடுஞ்சாலை அனுமதிக்கவில்லை. இதனால் பாலங்கள் அருகே தற்காலிக மண்பாதை அமைத்து இந்த சிலை ஓசூருக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கர்நாடக எல்லையான ஓசூர் அருகே உள்ள பேரண்டப் பள்ளிக்கு இந்த பெருமாள் சிலை வந்துவிட்டது.

ஆனால் இந்த லாரி அங்குள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை கடந்தால் மட்டுமே பெங்களூருக்கு கொண்டு செல்ல முடியும். இதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி தரவில்லை என்பதால் ஆற்றின் குறுக்கே தற்காலிக மண்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் ஆற்றின் குறுக்கே பாதை அமைத்தால் தங்களுக்கு வரும் தண்ணீர் தடைபடும் என்று அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பாதையின் கீழே தண்ணீர் போக குழாய் அமைத்து தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றின் குறுக்கே மண்பாதை அமைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

கடந்த 6 மாதமாகியும் தமிழக எல்லையை தாண்டாத இந்த பெருமாள் சிலை வழியில் உள்ள சிக்கல்களை கடந்து எப்போது பெங்களூருக்கு கொண்டு செல்லப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மண் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று 10-வது நாளாக பெருமாள் சிலை அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை அந்த பகுதியில் செல்பவர்கள் திரளாக வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
Tags:    

Similar News