செய்திகள்

23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்- மு.க. ஸ்டாலின் பேச்சு

Published On 2019-05-17 09:57 GMT   |   Update On 2019-05-17 09:57 GMT
வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சூலூரில் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

சூலூர்:

சூலூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று 2-வது கட்ட பிரசாரம் செய்தார். முதலிபாளையம், முத்து கவுண்டன் புதூர், குரும்ப பாளையம்,கரவழி மாதப்பூர், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் கட்சி தி.மு.க. அல்ல. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றும் கட்சி. கைத்தறி நெசவாளர்களுக்கும், தி.மு.க.வுக்கும் என்றும் தொப்புள் கொடி உறவு உள்ளது. அந்த உறவோடு தான் உங்களை பார்க்கிறோம்.

ஆட்சியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பது தான் இருப்பவர்களுடைய கவலையாக இருக்கிறது. இந்த ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சியாக உள்ளது. அதனை தாங்கி பிடிப்பது மோடி அரசு.

மத்திய அரசு எது சொன்னாலும் கூனி குறுகி கேட்கும் ஆட்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி உள்ளது.

ஜி.எஸ்.டி.யால் வணிகர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜி.எஸ்.டி. பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

கைத்தறி தொழில் நவீனமயமாக்கப்படும். கைத்தறிக்கு தேவையான உபகரணங்கள் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படும். கைத்தறி ரகங்களை விற்க கண்காட்சி அரங்குகள் ஏற்படுத்தப்படும்.

மற்ற கட்சிகள் பிரசாரத்திற்கு வருவார்கள். வென்றால் அதை செய்வோம். இதை செய்வோம் என்பார்கள். வென்றதும் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.


இதற்கு உதாரணம் பிரதமர் மோடி. ஆண்டுக்கு 2 கோடி பேர் வீதம் 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார். இது வரை ஒருவருக்கு கூட வேலை கிடைக்கவில்லை. 

23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.22 தொகுதி இடைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றால் 119 இடங்களை பெற்று நாம் ஆட்சி அமைப்போம். தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் மத்தியிலும், மாநிலத்திலும் வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க. ஆட்சிக்கு வருவதை தடுக்க 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதனை எதிர்த்து நான் நோட்டீஸ் அனுப்பினேன். இவ் விவகாரத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் பெற்ற தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்ற விடுமுறை காரணமாக அ.தி.மு.க. மேல் முறையீடு செய்ய முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News