செய்திகள்
கைதானவர்களை போலீசார் வேனில் ஏற்றிய காட்சி

திருச்சியில் கமல்ஹாசன் உருவபொம்மையை எரிக்க முயன்ற 7 பேர் கைது

Published On 2019-05-16 10:49 GMT   |   Update On 2019-05-16 10:49 GMT
திருச்சியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

இந்து தீவிரவாதி என்று பேசிய மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அகில பாரத இந்து மகா சபா கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி சிலை அருகே நேற்று மாலை போராட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநிலத்தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். முன்னதாக அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க கோட்டை சரக போலீஸ் உதவி கமி‌ஷனர் சந்திரசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே போராட்டம் நடத்த வந்தவர்களிடம் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது, மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர். இருப்பினும் அக்கட்சி நிர்வாகிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் உருவபொம்மையை பறிக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், இந்து மகா சபா கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்து,அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News