செய்திகள்
கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு விவசாய சங்கத் தலைவர் -விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூரில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தர்ணா போராட்டம்

Published On 2019-05-13 10:04 GMT   |   Update On 2019-05-13 10:04 GMT
தனியார் சர்க்கரை ஆலை அதிபரை கைது செய்யக்கோரி கடலூரில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில செயலாளர் சக்திவேல் கடலூர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் சுகுனபூசணன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே இன்று திரண்டனர்.

விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலை அதிபர் மற்றும் வங்கி அதிகாரிகள் கரும்பு ஆலை அதிகாரிகள் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என கூறினார்கள்.

இதையடுத்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தனியார் ஆலை அதிபரை கைது செய்ய வேண்டும் அல்லது எங்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

அவர்களிடம் உங்கள் கோரிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனை சந்தித்து மனு கொடுங்கள் என போலீசார் அறிவுறுத்தினார்கள்.

இதனைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் மனு கொடுக்க சென்றனர்.

இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
Tags:    

Similar News