செய்திகள்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு விசாரணை நடத்த வந்த சி.பி.ஐ. அதிகாரிகள்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - சி.பி.ஐ. விசாரணை தீவிரம்

Published On 2019-05-11 06:41 GMT   |   Update On 2019-05-11 06:41 GMT
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அதன் பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளி நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களின் பெயர் பட்டியலை பெற்றுச் சென்றனர் .

இதுதவிர பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம், பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் சென்றனர். ஆனால் அங்கு எதற்கு சென்றார்கள் என்பது குறித்து தகவல் தெரியவில்லை.

பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகரில் சபரிராஜன் வீடு உள்ளது. அங்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். சபரிராஜன் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது அவர்கள் சில தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டிற்கும் சென்று விசாரணை நடத்தலாம் என்ற தகவல் பரவியது. ஆனால் இரவு 10 மணி வரை சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு செல்லவில்லை.

இந்த நிலையில் மாக்கினாம் பட்டி மற்றும் அதே பகுதி ஜோதி நகரில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பலரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் முகவரிகளை பெற்று சென்றுள்ளனர்.

இதனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
Tags:    

Similar News