செய்திகள்

ஜெயிக்கிற கட்சிக்கு வாக்களிக்கும் மனநிலையை மாற்றி விடுங்கள்- சீமான் பேச்சு

Published On 2019-05-09 10:10 GMT   |   Update On 2019-05-09 10:10 GMT
ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போட்டு விடுவோம் என்கிற மனநிலையை மக்கள் மாற்றி விட்டு, சமூக அக்கறையுள்ள நல்ல கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரவக்குறிச்சியில் சீமான் பேசியுள்ளார். #seeman

அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈசநத்தம் மற்றும் அரவக்குறிச்சி பள்ளி வாசல் அருகே உரூஸ் மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. ஏழை- பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்குவது தான் அரசின் கடமை. ஆனால் அது தனியார் முதலாளிகளின் வியாபார மையமாக மாற்றப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதனால் 890 அரசு பள்ளிகளை மூடும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே நேரம் கிராமப்பகுதியில் 815 மதுக்கடைகளை திறக்க போகின்றனர். இதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். சிலபள்ளிகளுக்கு 10 பேர் மட்டும் வருவதால் இத்தகைய நடவடிக்கை என அமைச்சர் கூறுகிறார். ஒரு 5 ஆண்டு எங்களிடம் ஆட்சியை கொடுத்து பாருங்கள். அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளிகளுக்கு படிப்பதற்காக வர வைப்போம். உலக தரத்திற்கு தமிழக கல்வியை மாற்றுவோம்.

ஒரு தனியார் முதலாளி தரமான கல்வியை கொடுக்க முடிகிற வேளையில், 8 கோடி மக்களால் நிறுவபெற்ற அரசால் தரமான கல்வியை கொடுக்க முடியாதா? 14 ஆயிரம் பள்ளிகளை திறந்து படிக்காத குழந்தைகளை எல்லாம் படிக்க வைத்தார் காமராஜர். ஆனால் மதுக்கடைகளை திறந்து குடிக்க வைக்கும் தற்போதைய நிலையை எண்ணி பார்க்க வேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் விசாரணையில் என்ன நீதி கிடைத்திருக்கிறது. பெரம்பலூரில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணை காணொளி எடுத்து வைத்து மிரட்டுகின்றனர். அதை எங்கள் கட்சி வக்கீல் உதவிக்கரம் நீட்டினார். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யாமல், எங்களது வக்கீலை கைது செய்து விட்டனர். எனவே இது போன்ற நிலையை மாற்ற வேண்டும் எனில், ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போட்டு விடுவோம் என்கிற மனநிலையை மக்கள் மாற்றி விட்டு, சமூக அக்கறையுள்ள நல்ல கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

நாங்கள் வாரிசு அரசியலை முன்னிலைப்படுத்தி வர வில்லை. தினக்கூலிகள், அன்றாடம் காட்சிகளின் வாரிசுகளாக அரசியலுக்கு வந்திருக்கிறோம். மக்களின் பசி, கண்ணீர், துன்பம் அறிந்த எங்களுக்கு தான் அதனை துடைக்க வழிதெரியும்.

இவ்வாறு அவர் கூறினார். #seeman 

Tags:    

Similar News