செய்திகள்

சேத்தியாத்தோப்பில் இன்று சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2019-05-08 04:32 GMT   |   Update On 2019-05-08 04:32 GMT
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இன்று காலை 14 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சாந்தி நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகணேசமூர்த்தி(வயது25). விவசாயி. இவருக்கும் சேத்தியாத்தோப்பை அடுத்த வட்டாத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

அதன் பேரில் இவர்களது திருமணம் சேத்தியாதோப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை நடக்க இருந்தது.

இந்த நிலையில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து கடலூரில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள் மற்றும் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அக்னீஸ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் திரிபுர சுந்தரி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவில் வட்டாத்தூரில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்த சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து விசாரித்தனர். 18 வயது நிரம்பும் வரை சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க கூடாது.

அதை மீறி திருமணம் செய்து வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறுமியின் பெற்றோரிடம் அதிகாரிகள் கூறினர்.

இதை ஏற்று திருமணத்திற்கான ஏற்பாடுகளை உடனே நிறுத்துவதாக சிறுமியின் பெற்றோர் கூறினர்.

இதை தொடர்ந்து அந்த 14 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

அந்த சிறுமியை அதிகாரிகள் மீட்டு கடலூரில் உள்ள குழந்தைகள் நலக்காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News