செய்திகள்

அ.தி.மு.க.வின் ஓட்டுக்களை பிரிக்க சூழ்ச்சி நடக்கிறது - பிரேமலதா குற்றச்சாட்டு

Published On 2019-04-04 10:55 GMT   |   Update On 2019-04-04 11:32 GMT
அ.தி.மு.க.வின் ஓட்டுக்களை பிரிக்க வேண்டும் என சில சூழ்ச்சிகள் நடப்பதாக பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார். #Premalatha
திருவாரூர்:

திருவாரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். ஜீவானந்தம், நாகை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தாழை.ம.சரவணன் ஆகியோரை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் மத்தியில் பிரேமலதா பேசியதாவது:-

அ.தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணி, மக்களால் போற்றப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த கூட்டணி. ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றக் கூட்டணி. இந்த கூட்டணி அமையக்கூடாது என எத்தனையோ சூழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் அவற்றை முறியடித்து இந்த கூட்டணி அமைந்துள்ளது.

2011 -ல் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் அமைத்தது போல மீண்டும் உருவான ராசியான கூட்டணி என தமிழக மக்களால் போற்றப்பட்டு வருகிறது. 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும்.

திருவாரூர் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளான கூத்தாநல்லூர் தனி தாலுகா ஆகிவிட்டது. திருவாரூர் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி புதிய வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்து சாலைகளும் தரமாக அமைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால், திருவாரூர், மடப்புரம் குறுகிய பாலம், சீனிவாசபுரம் குறுகிய பாலம் ஆகியவை அகற்றப்பட்டு பெரிய பாலமாக கட்டப்படும். திருவாரூரில் தொழில்நுட்பக் கல்லூரி கொண்டு வரப்படும். திருவாரூரில் இருந்து சென்னைக்கு பகலில் ரெயில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை பார்க்காத வளர்ச்சிகளை திருவாரூர் பெறும்.

அ.தி.மு.க.வின் ஓட்டுக்களை பிரிக்க வேண்டும் என சில சூழ்ச்சிகள் நடக்கின்றன. சூழ்ச்சிகளை முறியடித்து, சிந்தாமல், சிதறாமல் வாக்குகளை அதிமுக வேட்பாளருக்கு அளிக்க வேண்டும்.

இது இலையும், பூவும், கனியும் இணைந்து வெற்றி முரசு கொட்டும் கூட்டணி. எனவே எதிரணியைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. கஜா புயலின்போது, தஞ்சை, திருவாரூர், நாகை என்று எல்லா இடங்களுக்கும் நேரடியாக சென்று பார்த்தோம். தே.மு.தி.க. சார்பில் ரூ. 1 கோடி கொடுத்தோம். ஆளும் கட்சியான அ.தி.மு.க. அரசும் சிறப்பாக பணியாற்றி கஜா புயல் பாதிப்பே இல்லாத வகையில் மக்களை காப்பாற்றியுள்ளது.

கஜா புயல் பாதிப்படைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்துள்ளன. கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்களை இந்த மத்திய, மாநிலஅரசுகள். மீட்டெடுத்துள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொடுத்தவை பொய் தேர்தல் அறிக்கைகள். அவரது கட்சி முதலில் ஜெயிக்கிறதா? என்று பார்ப்போம். மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது செய்யப் போகும் கூட்டணி எங்கள் கூட்டணி தான். எனவே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு பிரேமலதா பேசினார். #Premalatha
Tags:    

Similar News