செய்திகள்

கவர்னர் கிரண்பேடியை உடனடியாக மாற்ற வேண்டும்- மார்க்சிஸ்டு கம்யூ. வலியுறுத்தல்

Published On 2019-03-25 10:02 GMT   |   Update On 2019-03-25 10:02 GMT
என்.ஆர். காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படும் கவர்னர் கிரண்பேடியை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூ. வலியுறுத்தியுள்ளது. #governorkiranbedi

புதுச்சேரி:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதா வது:-

தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த அசோக் ஆனந்த் தொடர்பான வழக்கில் கோர்ட்டு தண்டனை வழங்கியதை அடுத்து அவரது பதவி தானாக பறிபோனது.

அவர் பதவி இழந்ததாக சபாநாயகர் விதிமுறைகள் படி அறிவிப்பு வெளியிட்டார். இப்போது அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அசோக் ஆனந்த் தனது பதவி பறிப்பு சம்பந்தமாக கவர்னரிடம் கொடுத்த மனுவை கவர்னர் ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பி உள்ளார்.

அதில் யூனியன் பிரதேச சட்ட விதியின்படி சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதி இழப்பு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஜனாதிபதி இதனை விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது, புதுவை பிரதேச விதிகளுக்கு எதிரானது.

புதுவை அலுவல் விதிகள்படி எம்.எல்.ஏ. தகுதி இழப்பு தொடர்பாக கேள்வி எழுமானால் அமைச்சரவையின் முடிவு படிதான் செயல்பட வேண்டும். ஆனால், முதல்-அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் தெரியாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் 15.3.2019 அன்று ஜனாதிபதிக்கும், மத்திய உள்துறை செயலாளருக்கும் அனுப்பி உள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டது தேர்தல் விதிமுறைகளுக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும் மாறானதாகும்.எனவே, இந்திய தேர்தல் ஆணையமும், புதுவை தேர்தல் துறையும் விசாரித்து பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கவர்னர் கிரண்பேடி பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர். காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். எனவே அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். அல்லது தேர்தல் முடியும் வரை அவரை விடுமுறையில் செல்ல உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியுள்ளோம். இதுதொடர்பாக ஜனாதி பதிக்கும் புகார் மனு அனுப்ப உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

Tags:    

Similar News