செய்திகள்

ஹெல்மெட் கட்டாய சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் - கவர்னர் கிரண்பேடி மீண்டும் வலியுறுத்தல்

Published On 2019-02-26 15:00 GMT   |   Update On 2019-02-26 15:00 GMT
புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாய சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என கவர்னர் கிரண்பேடி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். #Kiranbedi
புதுச்சேரி:

புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் உள்ளது.

கட்டாய ஹெல்மெட் சட்டம் புதுவையில் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. ஹெல்மெட் அணியாததால் ஆண்டுதோறும் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தினார். இதையடுத்து கடந்த 11-ந்தேதி முதல் புதுவையில் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டது.

ஹெல்மெட் அணியாத வர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வழக்கு பதிவில் காட்டும் ஆர்வத்தை ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் காட்ட வேண்டும். அதன்பிறகு ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்தலாம் என கூறினார்.

இருப்பினும் காவல்துறை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களின் வாகன எண்களை குறித்துக்கொண்டனர். இவர்கள் மீது வழக்குபதிவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கவர்னருக்கு எதிராக கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவதில் தளர்வு ஏற்பட்டது. தற்போது கவர்னர் மீண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை புதுவையில் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என வாட்ஸ்அப்பதிவில் வலியுறுத்தியுள்ளார். மேலும் சுப்ரீம்கோர்ட் சாலை பாதுகாப்பு கண்காணிப்புக்குழு மூலம் புதுவை தலைமை செயலாளர் அஸ்வனி குமாருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், இருசக்கர ஓட்டுநர், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் கட்டாய ஹெல்மெட் சட்டம் தொடர்பாக கேட்கப்பட்ட அறிக்கையை இதுவரை ஏன் அனுப்பவில்லை? என விளக்கமும் கேட்டுள்ளது. இதனால் புதுவையில் மீண்டும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. #Kiranbedi
Tags:    

Similar News