செய்திகள்

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொகுசு வசதிகளுடன் தயாராகும் பிரசார வாகனங்கள்

Published On 2019-02-20 05:26 GMT   |   Update On 2019-02-20 05:26 GMT
பாராளுமன்ற தேர்தலையொட்டி கோவை நிறுவனத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொகுசு வசதிகளுடன் பிரசார வாகனங்கள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. #ParliamentElection
கோவை:

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அடுத்தக்கட்டமாக தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரத்தில் இறங்குவார்கள்.

ஒவ்வொரு கட்சி தலைவர்களும், வாகனங்களில் ஊர், ஊராக சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர். பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்களுக்காக கோவை சிவானந்தா காலனியில் உள்ள ‘கோயாஸ்’ நிறுவனம் பிரத்யேக சொகுசு வாகனங்கள் வடிவமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரியாஸ் கூறியதாவது:-

அரசியல் கட்சிகளின் தலைவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வாகனங்களில் சொகுசு வசதி செய்யப்படும். சுற்றும் நாற்காலி, நவீன ‘ஹைட்ராலிக் கிரேன்’, ‘பெட்ரூம்’, ‘அட்டாச்டு டாய்லெட்’, ‘பாத்ரூம்’, ‘வாஷ் பேசின்’ உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

பிரத்யேகமாக ஓய்வெடுக்கும் வசதியுள்ள வாகனங்களும் தயாராகி வருகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரசாரத்துக்காக 2 வாகனங்கள் பிரத்யேகமாக தயாராகி வருகிறது. இந்த வாகனங்களில் டி.வி., ‘டாய்லெட்’, ‘ஹைட்ராலிக் கிரேன்’, டி.டி.எச். வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.



‘குளுகுளு’ வசதி கொண்ட இதுபோன்ற சொகுசு வாகனம் வடிவமைக்க 15 முதல் 20 நாட்களாகும். இதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவரது பழைய வாகனத்தையே பயன்படுத்த உள்ளார். அவ்வாகனத்தின் தரம் பரிசோதிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிறுவனத்தினர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சொகுசு வசதிகளுடன் பிரசார வாகனத்தை வடிவமைத்து கொடுத்திருந்தனர்.

மேலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கும் பிரசார வாகனத்தை வடிவமைத்து கொடுத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection
Tags:    

Similar News