செய்திகள்
சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான பேராசிரியர் முருகன்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக வழக்கு: பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஜாமீனில் விடுதலை

Published On 2019-02-20 05:03 GMT   |   Update On 2019-02-20 05:03 GMT
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கைதான பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஜாமீனில் விடுதலையானார்கள். #NirmalaDevi
மதுரை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அந்த கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள். 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

எனவே முருகன், கருப்பசாமி தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இருவருக்கும் ஜாமீன் வழங்கி கடந்த 12-ந்தேதி உத்தரவிட்டது.

நிர்மலாதேவி தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கு கடந்த 14-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவு நகல் கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஜாமீன் உத்தரவு ஆவணங்கள் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. நீதிபதி (பொறுப்பு) சாய் பிரியா விசாரணை நடத்தி முருகன், கருப்பசாமி இருவருக்கும் தலா ரூ. 75 ஆயிரம் சொத்து மதிப்புள்ள 4 நபர்களை ஜாமீன்தாரர்களாக ஏற்றுக் கொண்டு ஜாமீனில் விட அனுமதி வழங்கினார்.

நீதிபதி உத்தரவு தொடர்பான ஆவணங்கள் மதுரை சிறைத்துறை அதிகாரிகளிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

9 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையான இருவரையும் உறவினர்கள் அழைத்துச் சென்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த முருகன் நிருபர்களிடம் கூறும்போது ‘என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதனை சட்டப்படி சந்திப்பேன்’ என்றார். #NirmalaDevi #NirmalaDeviAudioCase
Tags:    

Similar News