செய்திகள்

பேராசிரியர் முருகனை விடுவிக்க கோரிய வழக்கு- சிபிசிஐடி சூப்பிரண்டு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு

Published On 2019-02-19 07:29 GMT   |   Update On 2019-02-19 07:29 GMT
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதான பேராசிரியர் முருகனை விடுவிக்க கோரிய வழக்கில் சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு பதில் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #NirmalaDevi
மதுரை:

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த முருகன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி மீது வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் என் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித ஆதாரங்களுமின்றி என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த முதல் குற்றவாளியான நிர்மலா தேவி என் மீது எத்தகைய குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை.

அதே போல பாதிக்கப்பட்ட 4 மாணவிகள், வழக்கில் தொடர்புடைய விஜய துரை, கலைச்செல்வன் ஆகியோரும் என் மீது எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை.

அதோடு, எனது குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடன் சுமையால் தவித்து வரும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் என்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தொடர்ந்த வழக்கை, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

எனவே மகளிர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, என்னை இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து பதிலளிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். #NirmalaDevi #NirmalaDeviAudioCase
Tags:    

Similar News