செய்திகள்
முழுகொள்ளளவை எட்டியுள்ள வீராணம் ஏரி கடல்போல் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது- சென்னைக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2019-01-19 04:24 GMT   |   Update On 2019-01-19 04:24 GMT
வீராணம் ஏரி நேற்று மாலை முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. 2-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மாவட்டத்தின் பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 27-ந் தேதி வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இதனால் ஏரி கடல் போல் காட்சி அளித்தது.

இதற்கிடையில் கடந்த 9-ந் தேதி 46.75 அடியாக ஏரியின் நீர் மட்டம் குறைந்தது. இந்த நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே மதகில் உடைப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், அந்த உடைப்பை சரி செய்தனர். தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு நீர் வரத்து இல்லாததால், ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

இதையடுத்து விவசாயத்துக்காகவும், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காகவும் கடந்த 15-ந்தேதி முதல் கீழணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. 2-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை நகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. நேற்று 60கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று காலை 44 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

தொடர்ந்து ஏரிக்கு நீர் வந்துகொண்டிருப்பதால் விவசாயத்துக்கு 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை எட்டிய போதும் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவை குறைத்தது ஏன்? என்று அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

தொடர்ந்து 74 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது மின் பற்றாக்குறை காரணமாக சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீர் 44 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த மின் பற்றாக்குறையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பின்னர் வழக்கம்போல் சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #VeeranamLake

Tags:    

Similar News