செய்திகள்

டிஎம்எஸ்-வண்ணாரப்பேட்டை மெட்ரோ வழித்தடத்தில் ஜனவரி 19, 20ந்தேதி ஆய்வு

Published On 2019-01-14 09:15 GMT   |   Update On 2019-01-14 09:15 GMT
டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையேயான வழித்தடத்தை வருகிற 19 மற்றும் 20-ந்தேதிகளில் பாதுகாப்பு குழு ஆய்வு செய்யும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. #MetroTrain
சென்னை:

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

அதன்படி கோயம்பேடு- ஆலந்தூர், விமான நிலையம்-சின்னமலை, பரங்கிமலை-சென்ட்ரல், விமான நிலையம்- சென்ட்ரல், சின்னமலை-டி.எம்.எஸ். ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையே 9.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டது.

இந்த வழித்தடத்தில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்ட்ரல், ஐகோர்ட்டு, மண்ணடி ஆகிய 6 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகின்றன.

இந்த புதிய வழித்தடத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ந் தேதி டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது. அதன் பின்னர் கடந்த மாதம் 7-ந்தேதி மெட்ரோ ரெயில் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

இதைத்தொடர்ந்து இந்த புதிய வழித்தடத்தில் பாதுகாப்பு குழு ஆய்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. இந்த ஆய்வு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையேயான வழித்தடத்தை வருகிற 19 மற்றும் 20-ந்தேதிகளில் பாதுகாப்பு குழு ஆய்வு செய்யும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 19-ந்தேதி வண்ணாரப்பேட்டையில் இருந்து பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் ஆய்வை தொடங்குகிறார்.

பாதுகாப்பு குழு ஆய்வுக்கு பிறகு இந்த புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும். #MetroTrain
Tags:    

Similar News