செய்திகள்

சவுகார்பேட்டையில் 6 ஜவுளிக்கடை-நகைக்கடைகளில் வருமானவரி சோதனை

Published On 2019-01-12 06:38 GMT   |   Update On 2019-01-12 06:38 GMT
சென்னை சவுகார்பேட்டையில் 6 ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடைகளில் இன்று காலையில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை:

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் வரி ஏய்ப்பு செய்து வியாபாரம் நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அங்குள்ள கடைக்காரர்கள் தாக்கல் செய்துள்ள வருமானவரி விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் மின்ட் தெருவில் உள்ள 6 ஜவுளிக்கடைகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்தது.

இதையொட்டி வருமானவரி அதிகாரிகள் இன்று காலையில் மின்ட் தெருவில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மொத்தம் 6 ஜவுளிக்கடைகளில் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. கடைகளில் விற்பனையான தொகைக்கும் பில்லுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதேபோல் லீலா கோல்டு-டைமண்ட் நகைக் கடையிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த கடையிலும் கணக்கில் வராத பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

ஜவுளிக்கடை அதிபரின் வீடு-அலுவலங்களிலும் வருமான வரி அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதுபற்றி வருமானவரி அதிகாரிகள் கூறுகையில், எங்களுக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கடைகளில் சோதனை நடத்தி வருகிறோம். சோதனை முடிந்த பிறகு தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பதை தெரிவிக்க இயலும் என்று தெரிவித்தனர்.

வருமான வரித்துறையினரின் சோதனை சவுகார்பேட்டை வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News