செய்திகள்
முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வீராணம் ஏரி கடல் போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது

Published On 2018-12-28 09:28 GMT   |   Update On 2018-12-28 09:28 GMT
வீராணம் ஏரி நேற்று மாலை தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இந்த ஆண்டில் முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது. #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

இந்த ஏரி மூலமாக சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர்வரும். பருவமழை காலங்களில் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 47 அடி வரை உயர்ந்தது.

ஆனால் கடந்த சிலநாட்களாக வீராணம் ஏரியின் சுற்றி உள்ள பகுதிகளில் சரிவர மழை பெய்யாததால் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 45.25 அடியாக குறைந்தது.

ஏரியின் நீர்மட்டம் 39 அடிக்கு குறையாமல் இருந்தால் தான், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீரை அனுப்பிவைக்க முடியும். கோடைகாலத்தில் சென்னைக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும். இந்த நிலையில் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியதால், ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக கூடுதலாக தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டது.

கீழணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று மாலை ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இந்த ஆண்டில் முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது.

தற்போது பாசன பகுதியில் சம்பா பயிர் அறுவடை காலம் நெருங்கி விட்டதால், பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்து உள்ளது. எனவே ஏரியில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 24 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் சென்னை குடிநீருக்காக வினாடிக்கு தொடர்ந்து 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. #VeeranamLake

Tags:    

Similar News