செய்திகள்

தமிழகத்தின் உரிமையை அதிமுக அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது- அமைச்சர் உதயகுமார் பேச்சு

Published On 2018-12-21 10:14 GMT   |   Update On 2018-12-21 10:14 GMT
மேகதாது பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறோம். ஒருபோதும் தமிழக உரிமையை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம் என்று அமைச்சர் உதயகுமார் பேசினார். #ministerudayakumar #tngovt

மதுரை:

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்காக முதற் கட்டமாக ரூ.1,264 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு வரவழைத்து ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிய தமிழக முதல்- அமைச்சர், துணை முதல்வர், பிரதமர் ஆகியோருக்கு அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் தோப்பூரில் நேற்று நடந்தது.

இதில் அ.தி.மு.க புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள், சரவணன், மாணிக்கம், பெரியபுள்ளான், அமைப்பு செயலாளர் முத்து ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரவை மாநில நிர்வாகிகள் வெங்கடசாலம், இளங்கோவன், வெற்றிவேல், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், ஐ.பி.எஸ். பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு நன்றி அறிவிப்பு தீர்மானங்களை வாசித்து பேசியதாவது

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமையவேண்டும் என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்பிறகு ஜெயலலிதாவின் எண்ணத்தை முதல்- அமைச்சரும், துணை முதல்- அமைச்சரும் இணைந்து பிரதமரிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். அதற்கு பலனாக தற்போது தென் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முதன்முதலாக வித்திட்டவர் ஜெயலலிதா தான். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும்.

எங்களை எதிர்கட்சிகள் மத்திய அரசின் அடிமை என்று குற்றம் சாட்டுகின்றனர். நாங்கள் அடிமைகள் கிடையாது. தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் திட்டங்களுக்கு உடந்தையாக இருந்தால் மத்திய அரசை எதிர்க்க தயங்கமாட்டோம்.

இதே காவிரிக்காக நாடாளுமன்றத்தை 24 நாட்கள் முடக்கினோம். தற்போது மேகதாது பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறோம். ஒருபோதும் தமிழக உரிமையை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார். #ministerudayakumar #tngovt

Tags:    

Similar News