செய்திகள்

பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்கள் ஆதிக்கம் - ராமதாஸ் அறிக்கை

Published On 2018-12-14 06:57 GMT   |   Update On 2018-12-14 07:46 GMT
பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ் நாட்டில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் முழுக்க முழுக்க வட இந்தியர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் எழுப்பப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுவது இந்தியாவில் தான் தமிழகம் இருக்கிறதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் வேதியியல் பொறியாளர் பணிக்கு 21 பேர், இயந்திரவியல் பொறியாளர் பணிக்கு 9 பேர், மின்னியல் பொறியாளர் பணிக்கு 5 பேர் உட்பட மொத்தம் 8 வகையான பணிகளுக்கு 42 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை கடந்த செப்டம்பர் 24-ந் தேதி வெளியிடப்பட்டது.

அப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் 11-ந்தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக வேதியியல் பொறியாளர் பணிக்கான நேர்காணலுக்கு ஒரு பணிக்கு மூவர் வீதம் 65 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பது தான் அதிர்ச்சியளிக்கும் வி‌ஷயமாகும்.

சென்னை பெட்ரோலிய நிறுவனத்திற்கான பணியாளர்களும், அதிகாரிகளும் கடந்த 2003-ம் ஆண்டு வரை முழுக்க முழுக்க தமிழக அளவில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். 2003-ம் ஆண்டிற்கு பிறகு வட இந்தியர் படிப்படியாக உள்ளே திணிக்கப்பட்டனர். இப்போக்கு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இப்போது முழுக்க முழுக்க வட இந்தியர்கள் மட்டுமே அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர்.

அதற்கு ஏற்ற வகையில் தேர்வு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2003-ம் ஆண்டு வரை சென்னை பெட்ரோலிய நிறுவனம் நேரடியாக ஆட்களைத் தேர்வு செய்து வந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக ஆள் தேர்வுக்கான போட்டித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை செய்து தான் முழுக்க முழுக்க வட இந்தியர்கள் சென்னை பெட்ரோலிய நிறுவனத்தின் அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு அஞ்சல்துறை பணிக்கான போட்டித்தேர்வில் தமிழ்ப் பாடத்தில், தமிழே தெரியாத அரியானா மாணவர்கள் எப்படி 96 சதவீத மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தனரோ, அதேபோல் தான் சென்னை பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் பணிக்கான தேர்வுகளிலும் வட இந்தியரை வெற்றி பெறச் செய்வதற்காக அனைத்து முறைகேடுகளும் செய்யப்படுகின்றன. இதற்கு சென்னை பெட்ரோலிய நிறுவன நிர்வாகமும் துணை போகிறது.

அதிகாரிகள் நிலையிலான நியமனங்களில் மட்டுமே வட இந்தியர் திணிக்கப்பட்ட நிலை மாறி இப்போது தொழில் பழகுனர், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளிலும் வட இந்தியர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றனர்.

சென்னை பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சென்னை துறைமுகத்திலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்காக குழாய்ப் பாதை அமைக்கப்பட்டது. அதற்கு கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குழாய்ப் பாதை அமைக்க ஒத்துழைத்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று சென்னை பெட்ரோலிய நிறுவனம் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதைக் கூட நிறைவேற்றாமல் வட இந்தியர்களை பணியில் திணிக்கும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது.

தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 75 விழுக்காடும், அதற்கு கீழ் உள்ள பணிகளில் 100 விழுக்காடும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாநில ஒதுக்கீடாக வழங்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்தால், இந்த சமூக அநீதியைக் கண்டித்து சென்னை பெட்ரோலிய நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Ramadoss

Tags:    

Similar News