செய்திகள்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம்-பூண்டி ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு

Published On 2018-11-29 07:38 GMT   |   Update On 2018-11-29 07:38 GMT
சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி, பூண்டி ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் பருவமழை தீவிரமடைந்தால் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Veeranamlake #Poondilake
ஊத்துக்கோட்டை:

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளாக பூண்டி மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிகள் உள்ளன.

கடந்த சில நாட்கள் பெய்த தொடர் மழையின் காரணமாக பூண்டி, வீராணம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. இதையடுத்து சென்னை குடிநீருக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க அதிகாரிகளாக முடிவு செய்து உள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இதையடுத்து சென்னைக்கும், விவசாய பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்கின்றது. இதனால் கீழணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது. இதில் இன்று 1,350 கனஅடி நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் செங்கால் ஓடை, பாப்பாக்குடி ஓடை உள்ளிட்ட பல்வேறு வாய்க்கால்கள் மூலமும் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 45 அடிக்கு கீழ் இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஏரியின் நீர்மட்டம் 46.60 அடியாக இருந்தது. இன்று அது 46.70 அடியாக உயர்ந்துள்ளது.

ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. நேற்று 70 கனஅடி தண்ணீர் அனுப்பபட்டது. இந்த நிலையில் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் இன்று வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது,

கஜா புயல் காரணமாக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயலின்போது தேவையான மழை இல்லாததால் தற்போது ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விவசாய பாசனத்துக்கு தண்ணீர் தேவை உள்ளது என்பதாலும், சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் வீராணம் ஏரியில் தொடர்ந்து தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

47 அடிக்கு மேல் தண்ணீர் வந்து விட்டால் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவது நிறுத்தப்படும். கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படும். வீராணம் ஏரி விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்றார்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 21.38 அடியாக பதிவானது. 387 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது (மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி).

ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 20 கன அடி தண்ணீர் பேபி கால்வாய் வழியாக அனுப்பப்படுகிறது. வரும் நாட்களில் பருவமழை தீவிரமடைந்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Veeranamlake #Poondilake

Tags:    

Similar News