செய்திகள்
வீராணம் ஏரியில் தண்ணீர் அதிகமாக உள்ளதால் கடல் போல் காட்சி அளிக்கிறது

தொடர் மழை- வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.80 அடியாக உயர்வு

Published On 2018-11-23 06:47 GMT   |   Update On 2018-11-23 06:47 GMT
கடலூரில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.80 அடியாக உயர்ந்துள்ளது. #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும், விவசாய பாசனத்துக்கு தேவையான தண்ணீர் வழங்குவதிலும் முதன்மையான ஏரியாக விளங்குகிறது.

கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி முதல் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் 46.80 அடியாக உயர்ந்தது. இதையடுத்து சென்னைக்கும், விவசாய பாசனத்துக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பின்னர் மழை இல்லாததாலும், வடவாறு வழியாக அதிக தண்ணீர் வராததாலும் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் 44 அடியாக நீர்மட்டம் குறைந்தது. இந்த நிலையில் தற்போது வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் பல்வேறு ஓடைகள் வழியாக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் வருகிறது.

நேற்று ஏரியின் நீர்மட்டம் 45.55 அடியாக இருந்தது. இன்று அது சற்று அதிகரித்து 45.80 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாதோப்பில் உள்ள வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சென்னைக்கு தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று 71 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது. விவசாய பாசனத்துக்கு 34 மதகுகள் வழியாக 80 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. #VeeranamLake
Tags:    

Similar News