செய்திகள்

கொட்டும் மழையில் பூண்டி ஏரியில் கலெக்டர் ஆய்வு

Published On 2018-11-22 08:03 GMT   |   Update On 2018-11-22 08:03 GMT
பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதையொட்டி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி பூண்டி ஏரியை ஆய்வு செய்தார். #PoondiLake
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று அதிகாலை முதல் பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி பூண்டி ஏரியை ஆய்வு செய்தார்.

முதலில் அவர் புல்லரம்பாக்கம் பகுதியில் உள்ள பூண்டி ஏரியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் இணைப்பு கால்வாயை பார்வையிட்டார். பின்னர் இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்படும் ‌ஷட்டர்களின் உறுதி தன்மை பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் பேபி கால்வாயை ஆய்வு செய்து பூண்டி ஏரியின் நீர் மட்டம் மற்றும் நீர் இருப்பு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

அப்போது, பலத்த மழை தொடர்ந்து பெய்து பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிட 16 ‌ஷட்டர்களை தயாராக வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

ஆய்வின் போது பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவுரிசங்கர், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் இருந்தனர்.

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டதால் ஏரியில் நீர்இருப்பு குறைந்து உள்ளது. இன்றைய நிலவரப்படி ஏரியில் 363 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

இதனால் பூண்டியிலிருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறப்பு நேற்று இரவு நிறுத்தப்பட்டது.

சென்னை குடிநீர் வாரியத்துக்கு மட்டும் 18 கன அடி வீதம் பேபி கால்வாய் மூலமாக அனுப்பப்படுகிறது. #PoondiLake

Tags:    

Similar News