செய்திகள்
கண்ணமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி.

திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Published On 2018-11-19 05:00 GMT   |   Update On 2018-11-19 05:00 GMT
திருண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகாதீப திருவிழாவுக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். #KarthigaiDeepam #ArunachaleswararTemple
திருவண்ணாமலை:

திருண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.

தீபத்தை காணவும், மலையை சுற்றி கிரிவலம் செல்லவும் அன்றைய தினம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபத்திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், கூட்ட நெரிசலை சமாளிக்கவும், கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் இருந்து செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், டி.ஐ.ஜி. வனிதா, போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. மகாதீப திருவிழாவுக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு இன்று திருவண்ணாமலை வந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து முதற்கட்டமாக 700 போலீசார் சென்றனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆசைதம்பி (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) தலைமையில் 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 700 போலீசார் இன்று காலை வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர்.

பரணி தீபம், மகா தீபத்தின் போது பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. செல்போனுடன் வருபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் கிரிவலப்பதை, கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது. குட்டிவிமானங்கள் மூலம் பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்படுகின்றது.

கிரிவலப்பாதையில் கேமராக்கள் பொருத்தபட்டுள்ளன. மேலும் 5 லட்சம் குற்றவாளிகள் குறித்த விவரங்கள் சேகரித்து வைக்கபட்டுள்ளன.

கேமராவில் அவர்கள் நடமாட்டம் பதிவானால் கண்டுபிடித்து பிடிக்கும் வகையில் தொழில் நுட்ப வசதிகள் செய்யபட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்ட எல்லையான வந்தவாசி திண்டிவனம் சாலை, கீழ்பென்னாத்தூர் சாலை, வேட்டவலம், ஆரணி, செங்கம், கண்ணமங்கலம் ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

தீபத் திருவிழாவுக்கு வரும் அனைத்து வாகனங்கள் தணிக்கை மற்றும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன.  #KarthigaiDeepam #ArunachaleswararTemple

Tags:    

Similar News