செய்திகள்

செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, அரக்கோணத்துக்கு புறநகர் ரெயில் சேவை அதிகரிக்கப்படுகிறது

Published On 2018-11-05 08:55 GMT   |   Update On 2018-11-05 08:55 GMT
செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களுக்கு புறநகர் ரெயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக கடற்கரை-செங்கல்பட்டு இடையே ரெயில்களின் எண்ணிக்கை மிக அதிகளவு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:

சென்னையில் புறநகர் பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.

சென்னை-செங்கல்பட்டு, சென்னை-அரக்கோணம், சென்னை-கும்மிடிப்பூண்டி ஆகிய 3 வழித்தடங்களில் இருந்து புறநகர் பகுதி மக்கள் ரெயில்கள் மூலம் சென்னை வந்து செல்கின்றனர்.

சென்னை-செங்கல்பட்டு இடையே தினமும் 224 புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 5.5 லட்சம் பயணிகள் தினமும் பயணிக்கிறார்கள்.

அதுபோல சென்னை- அரக்கோணம் இடையே தினமும் 151 புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் சுமார் 4.5 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள்.

சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே தினமும் 74 புறநகர் ரெயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 1.2 லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். மொத்தத்தில் தினமும் செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு சுமார் 11 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள்.

நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் புறநகர் ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. புறநகருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் பயணிகள் கூறி வருகிறார்கள்.

இதையடுத்து கூடுதல் புறநகர் ரெயில் சேவைகளை அறிமுகம் செய்ய தென்னக ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான ரெயில்வே கால அட்டவணை வருகிற 15-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

புதிய கால அட்டவணைப்படி செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களுக்கு புறநகர் ரெயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக கடற்கரை-செங்கல்பட்டு இடையே ரெயில்களின் எண்ணிக்கை மிக அதிகளவு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சென்னை சென்ட்ரலில் ஆவடி, திருவள்ளூர் வரை பல்வேறு சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த புறநகர் ரெயில்சேவையை அரக்கோணம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பஸ் ஸ்டிரைக் நடந்தபோது புறநகர் ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டது. அப்போது தென்னக ரெயில்வேக்கு கணிசமான அளவுக்கு வருவாய் கிடைத்தது. எனவே புறநகர் ரெயில் சேவை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.

வருகிற 15-ந்தேதி புதிய கால அட்டவணை வெளியிடப்படும் போது எந்த அளவுக்கு ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரம் தெரிய வரும்.
Tags:    

Similar News