செய்திகள்

ஏழைகள் பாதிக்காத வகையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்- ஜிகே வாசன்

Published On 2018-10-31 07:42 GMT   |   Update On 2018-10-31 07:42 GMT
ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் சொத்து வரியை குறைந்த அளவில் நிர்ணயிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். #TamilMaanilacongress #GKVasan #PropertyTax
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு சொத்து வரியை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய படி நிர்ணயிக்கும் அதே நேரத்தில் பொது மக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் குறைந்த அளவில் நிர்ணயம் செய்ய வேண்டும்

தமிழக அரசு குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கு உரிய கட்டிடங்களுக்கு சொத்து வரியை பல மடங்கு அதிகமாக உயர்த்தி நிர்ணயம் செய்திருப்பது ஏற்புடையதல்ல.

உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலில் சொத்து வரியை மக்களுக்கு சுமையாக அமையும் விதத்தில் தமிழக அரசு 5 மடங்கு, 10 மடங்கு என உயர்த்தியுள்ளது. அதாவது 2018- 19 -ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிலேயே வசூலிக்கப்படும் சொத்து வரி உயர்வு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மீறுகின்ற வகையில் அமைந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக உயர்த்தாமல் இருந்ததற்காக திடீரென்று சொத்து வரியை பல மடங்கு அதிகமாக உயர்த்தினால் பெரிதும் பாதிக்கப்படுவது சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பம் தான்.

காலச்சூழலுக்கு ஏற்ப, பொருளாதார நெருக்கடியை கவனத்தில் கொண்டு குறைந்த அளவில் சொத்து வரியை உயர்த்தினால் பொது மக்கள் ஓரளவிற்கு பொருளாதார சுமையை ஏற்றுக்கொள்வார்கள்.

எனவே உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய படி சொத்து வரியை நிர்ணயிக்கும் அதே நேரத்தில் பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் சொத்து வரியை குறைந்த அளவில் நிர்ணயம் செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TamilMaanilacongress #GKVasan #PropertyTax
Tags:    

Similar News