செய்திகள்

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை 657 மில்லி மீட்டர் பதிவு

Published On 2018-10-26 09:48 GMT   |   Update On 2018-10-26 09:48 GMT
குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 657 மில்லி மீட்டர் பெய்து உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மழை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Southwestmonsoon
நாகர்கோவில்:

குமரி மாவட்டம் இயற்கை வளம் மிகுந்த மாவட்டமாக திகழ்கிறது. தென்மேற்கு பருவமழை, வடமேற்கு பருவ மழை காலங்களில் இந்த மாவட்டத்தில் மழை பொழிவு அதிகமாக காணப் படும்.

அதே போல வருடம் முழுவதுமே குமரி மாவட்டத்தில் மழை பெய்வது வழக்கம். இதன் காரணமாக இங்குள்ள அணைகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளில் அதிக அளவு தண்ணீர் காணப்படும். இதனால் விவசாய பணிகளும் மும்முரமாக நடைபெறும்.

ஆனால் கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் போதுமான அளவு மழை பெய்யவில்லை. குமரி மாவட்டத்தில் இயல்பாக 1167 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். கடந்த ஆண்டு 890 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாக இருந்தது.

அதேசமயம் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் இயல்பான அளவை காட்டிலும் கூடுதல் மழை பெய்துள்ளது. கடந்த 10 மாதத்தில் மட்டும் 1232 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு அதிக மழை பொழிவு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். விவசாய பணிகளிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்யும். கடந்த ஆண்டு 457.81 மில்லி மீட்டர் மழை தென்மேற்கு பருவ மழை காலத்தில் குமரி மாவட்டத்தில் பெய்து இருந்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 657 மில்லி மீட்டர் பெய்து உள்ளது.

அதேபோல அக்டோபர் மாதத்தில் இதுவரை 212 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.

முள்ளங்கினாவிளை, புத்தனாறு, கன்னிமார், போன்ற பகுதிகளில் மழை பெய்து உள்ளது. அணை பகுதிகளிலும் மழை நீடிக்கிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக முள்ளங்கினா விளையில் 4 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளில் ஒன்றான பெருஞ்சாணி அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளது. 77 அடி உச்ச நீர்மட்டம் காண்ட பெருஞ்சாணி அணையில் இன்று காலை நிலவரப்படி 73.55 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 306 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து 606 கனஅடி தண்ணீரும், சிற்றாறு-1 அணையில் இருந்து 200 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி, பேச்சிப்பாறை, சிற்றாறு-1 ஆகிய 3 அணைகளில் இருந்தும் மொத்தம் 1501 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் குழித்துறை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த 5 நாட்களாக திற்பரப்பு அருவியில் வெள்ளம்போல தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இன்று திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். #Southwestmonsoon

Tags:    

Similar News