செய்திகள்

திருப்பூரில் போலி ஆதார் கார்டு அச்சடிக்க உதவிய மேலும் ஒரு பீகார் வாலிபர் கைது

Published On 2018-10-20 05:36 GMT   |   Update On 2018-10-20 05:36 GMT
திருப்பூரில் போலி ஆதார் கார்டு அச்சடிக்க உதவிய மேலும் ஒரு பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார். #Aadhaarcard

திருப்பூர்:

திருப்பூர் செவாந்தம் பாளையம் சாமந்த தோட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வங்க தேசத்தை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது தங்களுக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அவினாசி ரங்கா நகரில் தங்கி இருந்த பீகார் வாலிபர் ராம்சிஷ் வர்மா (34) என்பவர் அச்சடித்து கொடுத்தார் என கூறி இருந்தனர்.

அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் கொல்கத்தாவில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா சென்ற தனிப்படை போலீசார் ராம்சிஷ் வர்மாவை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து லேப்-டாப், கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்ய கூடிய கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அவருக்கு உதவியாக இருந்த அவினாசி ரங்கா நகரை சேர்ந்த சவரிமுத்து (54) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

அவர்கள் இருவரிடமும விசாரணை நடத்திய போது திருப்பூர் சங்கேரி பாளையத்தில் வசித்து வரும் பீகாரை சேர்ந்த ரவிசங்கர் சிங் (28) என்பவர் தான் தங்களுக்கு போலி ஆதார் கார்டு தொடர்பாக ஆட்களை அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ரவிசங்கர் சிங்கை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கூறும் போது, வட மாநில வாலிபர்களை போலி ஆதார் கார்டு மூலம் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தியதாக தெரிவித்தார்.

ரவிசங்கர் சிங் மூலம் போலி ஆதார் கார்டு பெற்று திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வட மாநில வாலிபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் வங்கதேச வாலிபர்கள் வேறு யாராவது உரிய ஆவணங்கள் இன்றி தங்கி உள்ளார்களா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. #Aadhaarcard

Tags:    

Similar News