செய்திகள்
ரோட்டில் அமர்ந்து விவசாயிகள் மறியல் செய்த போது எடுத்த படம்.

கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் இல்லை: 8 கிராம விவசாயிகள் சாலை மறியல்

Published On 2018-08-20 06:01 GMT   |   Update On 2018-08-20 06:01 GMT
கடைமடை பகுதிகளுக்கு இன்னும் முழுமையாக தண்ணீர் செல்லவில்லை. இதனால் 8 கிராமத்தை சேர்த்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். #Keralasouthwestmonsoon #Keralarain

மன்னார்குடி:

கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்திற்கு தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணை 2 முறை நிரம்பி டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரிகள், வாய்க்கால்கள் தூர்வாரப் படாத காரணத்தினாலும் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் முழுமையாக தண்ணீர் செல்லவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கண்டிதம்பேட்டை வடவாறு பிரிவில் வரும் பாலையூர் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும், குளங்கள், ஏரிகளில் தண்ணீர் நிரப்ப வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பைக்காநாடு, வல்லூர், தென்பறை, பாலையக் கோட்டை உள்ளிட்ட 8 கிராமத்தை சேர்த்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை திடீரென திருமக்கோட்டை- மன்னார்குடி சாலையில் அமர்த்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை காவிரி நீர் செல்லவில்லை. இதனால் விவசாயிகள் ஆங்காங்கே மறியல், ஆர்ப்பாட்டம் என போராடி வருகின்றனர்.

ஏரி- குளம்- வாய்க்கால்களை தூர்வாராமல், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொள்ளிடம் தண்ணீரை அப்படியே கடலுக்கு திருப்பி வீணாக்கி விட்டார்கள் என்று விவசாயிகள் குமுறலுடன் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News