செய்திகள்

இரணியல் அருகே விமானப்படை அதிகாரி வீட்டில் 137 பவுன் நகை - பணம் கொள்ளை

Published On 2018-05-19 16:06 GMT   |   Update On 2018-05-19 16:06 GMT
விமானப்படை அதிகாரி வீட்டில் 137 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரணியல்:

இரணியல் அருகே வில்லுக்குறி காரவிளை பகுதியை சேர்ந்தவர் வேணு (வயது 59). ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் குடும்பத்தோடு திருவனந்த புரத்திலும், மகள் இரணியல் அருகே மல்லங்கோடு பகுதியிலும் வசித்து வருகிறார்கள்.

வேணுவின் மனைவி திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று இருந்தார். வேணு நேற்று காலை மகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து வீட்டை பூட்டிவிட்டு நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

பின்னர் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது. அதில் இருந்த நகைகளும், பணமும் திருடப்பட்டிருந்தது.

வீட்டில் இருந்த 137 பவுன் நகை மற்றும் ரூ.26 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருந்தனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.

இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ் பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ் பெக்டர் பிச்சை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத் தினார்கள்.

கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். 2 கைரேகைகள் சிக்கி உள்ளது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை நாய் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கொள்ளை சம்பவம் குறித்து வேணு கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

வேணு வீட்டில் இருந்து வெளியே செல்வதை நோட்டமிட்டே கொள்ளையர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தின் போது வீட்டில் இருந்த வேணுவினுடைய நாயும் குறைக்க வில்லை. எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் தெரிந்த நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

Tags:    

Similar News