செய்திகள்

கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம்

Published On 2019-06-10 10:04 GMT   |   Update On 2019-06-10 10:04 GMT
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த யுவராஜ் சிங், கிரிக்கெட் தனக்கு போராட கற்றுக்கொடுத்ததாக உருக்கமாக தெரிவித்தார்.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியில் 2000-ல் கென்யாவுக்கு எதிரான போட்டியில்  யுவராஜ் சிங் அறிமுகமானார். 37 வயதாகும் யுவராஜ் சிங், இதுவரை இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 14 சதம், 52 அரைசதங்களுடன் 8071 ரன்கள் எடுத்துள்ளார்.



குறிப்பாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸர் விளாசி சாதனை படைத்தார். மேலும் 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் தனது பேட்டிங், பவுலிங், பீல்டிங் என பன்முகத்திறமையையும் வெளிப்படுத்திய யுவராஜ், இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.

2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் 362 ரன், 15 விக்கெட் வீழ்த்திய யுவராஜ் தொடர்நாயகன் விருது பெற்று அசத்தினார். இதனையடுத்து புற்றுநோய் பாதிப்பில் சிக்கி மீண்டு வந்த அவர் தனது பழைய ஆட்டத்திறனை இழந்தார். இதனால் அணியில் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டார்.



இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக யுவராஜ் சிங் இன்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "25 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற விரும்புகிறேன். கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது, துவண்டு விழுந்தால் எப்படி எழுந்து ஓட வேண்டும் என  போதித்தது.  

இந்திய அணிக்காக 400 போட்டிகளுக்கு மேல் விளையாடியது என் அதிர்ஷ்டம். 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றதைவிட வேறென்ன வேண்டும். என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிகவும் மோசமாக விளையாடியது 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தான். அப்போட்டியில் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தேன். அப்போதே என் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததை உணர்ந்தேன் " என கூறினார்.
Tags:    

Similar News