செய்திகள்

ஏபி டி வில்லியர்ஸ் மீது சோயிப் அக்தர் கடும் சாடல்

Published On 2019-06-08 10:30 GMT   |   Update On 2019-06-08 10:30 GMT
மீண்டும் தென்ஆப்பிரிக்கா அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்த டி வில்லியர்ஸ் மீது சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.
கிரிக்கெட் உலகில் ‘360 டிகிரி’ என்று அழைக்கப்பட்டவர் தென்ஆப்பிரிக்காவின் அதிரடி மன்னன் ஏபி டி வில்லியர்ஸ். இவர் கடந்த ஆண்டு கோடைக்கால கிரிக்கெட் தொடருக்குப்பின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் பலமுறை ஓய்வு முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என்ற போதிலும், தனது முடிவில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் மாறவில்லை.

ஆனால் ஐபிஎல், பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்காளதேச பிரிமீயர் லீக் என டி20 கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுவரை அந்த அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்து, மோசமான நிலையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்ததாகவும், உலகக்கோப்பைக்கான அணியை கடும் சிரமத்திற்கு பிறகு தயார் செய்ததால், வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இது மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஏபி டி வில்லியர்ஸ் மீது பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.

டி வில்லியர்ஸ் குறித்து ஐந்து நிமிட வீடியோவில் சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘சமீபத்தில் உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் விளையாட விரும்பினேன் என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய செய்திதான். ஆனால், தென்ஆப்பிரிக்கா மோசமான நிலையில் இருக்கும்போது, இந்த செய்தியை அவர் ஏன் வெளியிட வேண்டும்.



உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒப்பந்தத்தில் இருந்து விலக வேண்டிய நெருக்கடி ஏபி டி வில்லியர்ஸ்க்கு இருந்தது என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. எனினும் ஓய்வு முடிவிற்கு முன்பே ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை அவர் தேர்வு செய்து, உலகக்கோப்பையில் தன்னைத்தானே விடுவித்துக் கொண்டார். ஆகவே, நிதியின் (வருமானம்) அடிப்படையில்தான் எல்லாமே தொடங்கியது. இந்த முடிவை அவர் எடுத்திருக்கும்போது அதில் அவருடைய நிதி மற்றும் பொருளாதாரம் ஒரு பார்வையாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

உண்மையிலேயே நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால், அதை சரியாக தேர்வு செய்யுங்கள். ஆனால், நாட்டிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஒரு மனிதராக உங்களுடைய முடிவில் உறுதியாக இருக்கும்போது, அதில் இருந்து மாற வேண்டுமென்றால் அது பணத்தின் மீதான பேராசையாகத்தான் இருக்க முடியும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News