செய்திகள்

மாலத்தீவில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க உதவும் இந்தியா

Published On 2019-06-07 14:59 GMT   |   Update On 2019-06-07 14:59 GMT
மாலத்தீவில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கவும், கிரிக்கெட் அணியை கட்டமைக்கவும் இந்தியா உதவி செய்ய உள்ளது.
புதுடெல்லி: 

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு செல்கிறார். நாளை மாலத்தீவுக்கு செல்லும் அவர் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மாலத்தீவு பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்துதல், ராணுவம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட  துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்நிலையில், வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே இன்று நிருபர்களிடம் கூறுகையில், மாலத்தீவு கிரிக்கெட் அணியை கட்டமைக்கவும், ஸ்டேடியம் அமைக்கவும் தேவையான உதவிகளை செய்வது தொடர்பாக இந்தியா பரிசீலித்து வருவதாக கூறினார்.

“கடந்த ஏப்ரல் பெங்களூரில் ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்காக மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சாலிஹ் வந்திருந்தார். அப்போது, தனது நாட்டின் கிரிக்கெட் அணிக்கு இந்தியா பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், தரமான அணியாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

அவரது வேண்டுகோள்களில் ஒன்று மாலத்தீவில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்கு உதவும் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக பிசிசிஐயுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். கடந்த மே மாதம், மாலத்தீவு கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், உபகரணங்களை வழங்கவும் பிசிசிஐ குழு சென்றது” என்று விஜய் கோகலே தெரிவித்தார்.
Tags:    

Similar News